2 ஜூன், 2011

திருப்பூர் ராம்ராஜ்


சல்யூட் ராம்ராஜுக்கு சல்யூட்


Tuesday, May 31, 2011

வாரத்தின் முதல் நாள் கோவிலுக்கு சென்று கடவுளை வேண்டிக் கொண்டு பணிக்கு செல்லுவது வழக்கம், அது போலவே நேற்று காலையில் கோவிலுக்கு சென்றேன், அங்கு ஒரு பெரியவர் தீவிரமாக வழிபாடு செய்து கொண்டிருந்தார், நான் செல்வதற்கு முன்பிருந்தே அங்கு நின்று வழிபட்டு கொண்டிருந்தார்.

நானும் கடவுளை வேண்டிக் கொண்டு கோவிலை சுத்தி வந்து கொண்டிருந்தேன், அவரது மகன் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என வேண்டிக் கொண்டிருந்தார், அடுத்தடுத்த சுற்றுகளில் சுற்றி வரும் போது இன்னும் இரண்டு பேர்களின் பெயரையும் வேண்டுதலின் போது சொல்லிக் கொண்டிருந்தார், சரி! அவரின் அடுத்த இரண்டு மகன்கள் போலும் என எண்ணிக் கொண்டு, என்னுடைய வழிபாடு முடிந்ததும், வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்

அப்பொழுது அந்தப் பெரியவர், தம்பி பஸ் ஸ்டாண்டு வழியா போவீங்களா? போனீங்கன்னா என்னை அங்க இறக்கி விடுறீங்களான்னு கேட்டார், சரி ஏறிக்குங்கன்னு சொல்லி அவரை ஏற்றிக் கொண்டேன், போகும் வழியெங்கும் உள்ள கோவில்களை பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டே முன்பு சொன்னது போலவே அவரது மகன் இன்னும் இரண்டு பேர்களின் பெயரை முணுமுணுத்து வேண்டிக் கொண்டே வந்தார்.

எனக்கு ஆர்வம் தாளாமல், என்ன விசயம் சார், ரொம்ப தீவிரமா வேண்டிக்கிட்டு இருந்தீங்கன்னு கேட்டேன், அதுக்கு அவர், ஒண்ணுமில்லீங்க தம்பி! என்னோட பையன் கம்ப்யூட்டர் இஞ்ஜினியரிங் படிக்கறான், கடைசி வருசம், நல்ல மார்க் எடுக்கணும்னு வேண்டிக்கிட்டேன்னு சொன்னார், அப்படிங்களா சார், உங்களுக்கு மொத்தம் மூணு பசங்களான்னு கேட்டேன், இல்லீங்க தம்பி ஒரு பையன்தான் அவன் தான் படிக்கறான்னு சொன்னார்.

அப்படிங்களா, இல்லை மூணு பேர் பேரைச் சொல்லி வேண்டிகிட்டு இருந்தீங்களே, அதனால கேட்டேன்னு சொன்னேன், அதுங்களா அவங்க ராம்ராஜ் கம்பெனி முதலாளியும், அவரோட உதவியாளரும்னு சொன்னாரு, அவங்கதான் என் பையன படிக்க வைக்குறாங்கன்னு சொன்னார்.
அதிக மார்க் எடுத்துட்டு வசதி இல்லாம இருக்குற ஏழைக்குடும்பத்தை சேர்ந்தவங்களுக்கு அவங்க விருப்பப்பட்ட படிப்பு படிக்க உதவி செஞ்சுட்டு இருக்குறார்னு சொன்னாரு, எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது, இத்தனை நாள் திருப்பூர்ல இருக்கேன் எனக்கே தெரியாம போச்சேன்னு இருந்தது

ஓ, அப்படிங்களா, கொஞ்சம் விபரமாச் சொல்ல முடியுங்களா? எனக்கு தெரிஞ்சவங்க யாராச்சும் இருந்தா சொல்ல வசதியா இருக்கும்னு கேட்டேன், அவரு சொன்ன விபரங்கள் கீழே,


திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டுக்கு அருகிலுள்ள சென்னை சில்க்ஸ் போற வழிக்கு பின்னாடி சத்குரு டிரஸ்டுன்னு ஒண்ணு வச்சு நடத்திக்கிட்டு இருக்காரு, திருப்பூர் ராம்ராஜ் நிறுவனத்தின் திரு. கதிர்வேல் அவர்கள், அவர் கூட திருப்பூரின் பெரிய நிறுவனங்களின் முதலாளிகளும் துணையாக இருக்காங்க.

நல்லா படிச்சு நிறைய மார்க் வாங்கி படிக்க முடியாம இருக்குற ஏழை மாணவர்கள் அவங்களை அணுகினால், அவங்க படிச்சு முடிக்கற வரைக்கும், அவங்களோட கல்லூரி, உணவு, விடுதிக் கட்டணம் எல்லாத்தையும் கட்டி அவங்கள படிக்க வைக்குறாங்க.

இதுக்காக அவங்க உள்ளூர்க்காரங்க, வெளியூர்க்காரங்கன்னு பாகுபாடு பார்க்குறது கிடையாது. வெளியூர்லருந்து வந்தும் உதவி பெற்று போகிறார்கள், எனக்குத் தெரிஞ்சு அம்பது பசங்களுக்கு மேல படிக்க வச்சுகிட்டு இருக்காருனு சொன்னார்.

நல்லாப் படிக்கற யாருக்காவது உதவி வேண்டுமென்றால், திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து, மங்கலம் போகும் பேருந்தில் ஏறி, பழக்குடோன் பஸ் ஸ்டாப்பில் இறங்கி ராம்ராஜ் ஹெட் ஆபீஸ் எங்கன்னு கேட்டா எல்லாரும் வழி சொல்லுவாங்க, ஈசியா கண்டுபுடிச்சிடலாம், அங்க போய் திரு.கதிர்வேல் அவர்களின் பி.ஏ திரு.ஜீவானந்தம், அவரைப் பார்த்து விசயத்த சொல்லி உதவி கேட்டா ரெண்டு நாள்ல கண்டிப்பாக உதவி பண்ணுவாரு.

மறக்காம மார்க் சீட்டு கொண்டு போறது முக்கியம். ஏழை மாணவர்களா இருக்குறதும் ரொம்ப முக்கியம், என்னோட பையனுக்கு ரெண்டே நாள்ல டிடி எடுத்துக் கொடுத்து ஹெல்ப் பண்ணுனாங்க, இதுவரைக்கும் ரெண்டு லட்சம் ரூபா அளவுக்கு ஹெல்ப் பண்ணி இருக்காங்க, நான் கம்பெனில வேலை பார்த்தெல்லாம் இன்ஜினியரிங் படிக்க வைக்க முடியுங்களா, என்னோட பையனுக்கு அவருதான் காசு கட்டி படிக்க வைக்குறாருன்னு சொன்னாரு, உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராச்சும் இருந்தா கண்டிப்பா சொல்லுங்கன்னு சொன்னாரு.
சரிங்க கண்டிப்பா சொல்லுறேன், அப்படியே அவரோட போன் நம்பர் சொன்னீங்கன்னா கொஞ்சம் ஈசியா இருக்கும்னு சொன்னேன், இல்ல தம்பி அவரோட அனுமதி இல்லாம போன் நம்பர் கொடுக்கறது அவ்வளவு உசிதமா இருக்காது, அதுவுமில்லாம நேர்ல போய் கேட்குற மாதிரி போன்ல பேசுறது இருக்காது, நமக்கு உதவி வேணும்னா நாமதான் நேர்ல போய் கேட்கணும், இங்க பக்கத்துலதான இருக்கு, நேர்லயே போய்ப் பார்க்கச் சொல்லுங்க தம்பின்னு சொல்லிட்டாரு.

எனக்குத் தெரிஞ்சவங்க யாரும் இப்ப படிக்கறவங்க இல்லை, அதனால அவரு சொன்னதை பிளாக்குல பகிர்ந்துக்கணும்னு தோணுச்சு, யாராவது வசதி இல்லாதவங்க கல்வி உதவி தேவைப்படுறவங்க இருந்தா திருப்பூர் ராம்ராஜ் நிறுவனத்த அணுகலாம், எனக்கு இந்த விசயம் புதுசா இருக்குறதால இதோட நம்பகத்தன்மை எந்தளவுக்குன்னு தெரியல, திருப்பூர்ல இருக்குற விசயம் தெரிஞ்ச நண்பர்கள் சொல்லலாம், அவங்களோட போன் நம்பர் கிடைக்குமானு முயற்சிக்கிறேன். கிடைச்சா கண்டிப்பா பிளாக்குல போடறேன், 

ஏழை மாணவர்களின் கல்விக் கண் திறக்க இந்த மாதிரி சத்தமில்லாம உதவி பண்ணிட்டு இருக்கறவங்களையும் ஊக்குவிக்கிறது ரொம்ப முக்கியம், அதனால ஏழைக் குழந்தைகளோட கல்விக்கு உதவி பண்ணிட்டு இருக்குற ராம்ராஜ் நிறுவனத்தின் முதலாளி அவர்களுக்கும், திரு. கதிர்வேல், திரு. ஜீவானந்தம், மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக உள்ள அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

நண்பர்களே! இது போல உங்கள் ஊரிலயும் உதவி செய்யுற பெரியவங்க யாராச்சும் இருப்பாங்க, அவங்கள நீங்களும் அறிமுகம் செஞ்சீங்கன்னா உதவி தேவைப்படுறவங்களுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும், நன்றி

அன்புடன்
இரவுவானம்.

நண்பர் இரவு வானம் எழுதிய பதிவு பலரைச் சென்றடைய வேண்டுமென்பதற்காக அவருடைய அனுமதியுடன் இங்கும் பதியப்பட்டிருக்கிறது.