11 டிசம்பர், 2012

விஷ்ணுபுரம் விருது - 2012


விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது , விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 22 2012 சனிக்கிழமை மாலை 6 மணிக்குக் கோவையில் ஆர்.எஸ். புரம் மாநகராட்சி கலையரங்கில் நடைபெறவிருக்கிறது.
நிகழ்ச்சியில்
      எழுத்தாளர். நாஞ்சில்நாடன்
      ஜா. ராஜகோபாலன்
      விமர்சகர். மோகனரங்கன்
      இயக்குனர். சுகா
      கல்பற்றா நாராயணன் (மலையாளமொழிக் கவிஞர்)
      இசைஞானி. இளையராஜா
      எழுத்தாளர். ஜெயமோகன்
      கவிஞர். தேவதேவன்
ஆகியோர் பங்கேற்கின்றனர். 
விஷ்ணுபுரம் விருது 2012 அழைப்பிதழ்


நண்பர்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்..

5 ஏப்ரல், 2012

விழாத் துளிகள்!

வெறும் வார்த்தைகளில் முடிவதில்லை - நன்றி

                                                                - விஜி ராம்

நன்றி - இந்த ஒற்றை சொல்லில் எல்லாம் அடக்கமுடியுமா? இருந்தாலும் முடிந்தவரை என் நன்றியை தெரிவிக்கமுயல்கிறேன்.

நன்றி நண்பர்களே 

இணையத்தில் அறிமுகமாகி இதுவரை நேரில் கூட பார்த்திராத நண்பர்கள் சேர்ந்து ஆரம்பித்த குழுமம் என்ன செய்யலாம் - இதுதான் பெயரே. இதுவரை ஒரு பெயர் கூட வைக்கவில்லை. அதற்கு அவசியமும் இல்லை. எங்கள் நோக்கம் எங்கள் அளவில் நிறைவேறுகிறது. அது போதும். எந்த தேவையற்ற பேச்சும் இந்த குழுமத்தில் இருக்காது. தினேஷ், கே.விஆர், ஜோசப், அகிலா, மதார், அப்துல்லா, வெயிலான், வித்யா, பபாஷா இன்னும் சில நண்பர்கள் சேர்ந்து ஆரம்பித்த இந்த குழுமத்தில் இருந்து வந்ததுதான் நேசம். இந்த நண்பர்களின் முழு ஆதரவோடு கோவையிலிருந்து இயக்கப்படுகிறது. முழுக்க முழுக்க புற்றுநோய் விழிப்புணர்வுக்கு என்று ஆரம்பித்தது, ஆனால் எந்த வியாதிகளூக்கு அல்லது மருத்துவ ரீதியாக எதற்கு விழிப்புணர்வு தேவையோ அதை இனி செய்வோம்.

தேங்க்ஸ் மக்களே உங்க இந்த சப்போர்ட் இல்லனா இது சாத்தியம் இல்லை.

நன்றி நடுவர்களே 

விழிப்புணர்வு கதை, கட்டுரை, குறும்பட போட்டி நடத்துவதாக அறிவித்தாகிவிட்டது. நடுவர்கள் என்று யோசிக்கும் போதே தோன்றியவர்கள் ஸ்ரீதர் நாராயணன், பாலபாரதி மற்றும் வெயிலான் ரமேஷ். இவர்கள் கட்டாயம் மிகச்சிறப்பாக மிக நடுநிலையான விமர்சனம் தருவார்கள் என்ற என் எதிர்பார்ப்பு வீணாகவில்லை.  கடுமையான பணி சூழலிலும் மூவரும் ஒவ்வொரு கதையைபற்றியும் விவாதித்து மதிப்பெண்கள் அளித்து, தேர்ந்தெடுத்த அனைத்து கதைகளூக்கும் அவர்களின் கருத்துகளை தெரிவித்து... அவர்களின் சிரத்தையும் மெனக்கெடலுமே இந்த போட்டியை நல்ல முறையில் நடத்திக்கொடுத்தது.


கட்டுரை போட்டியின் நடுவர்களான டாக்டர் ராஜ்மோகன், டாக்டர் ப்ருனோ.  இவர்களின் மிகக்கடுமையான பணிகளுக்கும் பயணங்களுக்கும் நடுவில் கட்டுரைகளின் தரங்களை மதிப்பிட்டு, அதன் உண்மைத்தன்மையை விளக்கி மிகசிறப்பான முறையில் கருத்துகளை தெரிவித்தனர்.

நெஞ்சார்ந்த நன்றிகள் ஸ்ரீதர், பாலபாரதி, வெயிலான், டாக்டர் ராஜ்மோகன், டாக்டர் ப்ருனோ.

நன்றி சேர்தளம்

திருப்பூரில் இந்த பரிசளிப்பை நடத்தலாம் என்று முடிவுசெய்தவுடன் சேர்தளம் நண்பர்கள் விழாவில் கலந்து கொள்ள மட்டும் வந்தால் போதும் என்று சொல்லிவிட்டார்கள். இடம் ஏற்பாடு செய்து லைட்டின், மைக், ஜென்ரேட்டர், விருந்தினர்கள் என்று பார்த்து பார்த்து செய்த திருப்பூர் சேர்தளம் தலைவர் வெயிலான், முரளி, செந்தில்,செல்வம், பரிசல், ராமன், இன்னும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

நேற்றைய விழா :
மாலை 5.30க்கு ஆரம்பித்த விழா முதலில் செல்வம் அவர்களின் அறிமுக உரையுடன் ஆரம்பித்தது. அதைத்தொடர்ந்து முரளியின் வரவேறுபு உரை.
புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த சிறப்புரை ஆற்றிய டாக்டர். கலைச்செல்விஅவர்கள் (குமரன் மருத்துவமனை - திருப்பூர்)  புற்றுநோய் வருவதற்கான காரணங்கள், அதற்குரிய சிகிச்சை முறைகள், முன்கூட்டியே கண்டறிந்தால் புற்றுநோய் முற்றிலும் குணப்படுத்த கூடியது என்றும், ஒரு முறை சிகிச்சை எடுத்து குணமானவர்கள் மறுபடியும் குறைந்தது 5 வருடங்கள் மீண்டும் தொடர் சிகிச்சையில் இருக்க

வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கிய புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை போட்டிகளில் பரிசு பெற்ற நண்பர்களுக்கு பரிசும், சான்றிதழும்  விழா விருந்தினர்களுக்கு பொன்னாடை மற்றும் நினைவுபரிசுகளும் வழங்கப்பட்டது.

கட்டுரை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற திருமதி. மோகனா அவர்கள் - பழனியாண்டவர் கல்லூரியில் விலங்கியல் துறை பேராசிரியை, 30 ஆண்டு காலமாக தமிழ்நாடு அறிவியல் துறையில் இருப்பவர். இவர் மார்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து குணமடைந்தவர். இவரது உரையில் ஆண்களுக்கான மார்பு புற்றுநோய் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.


 


விழாவுக்கு தலைமை ஏற்ற திரு,.பி.ஆர்.கணேசன் அவர்களின் உரை அனைவரையும் மிக கனத்த மனநிலைக்கு கொண்டு சென்றது. புற்றுநோயால் அவர் தந்தை, சிறிய தந்தையர்கள் இருவர் மற்றும் அவரின் 21 வயது மகளை இழந்தது. புற்றுநோயின் வேதனை, போராட்டம் பற்றி அவரின் அனுபவங்கள் வந்திருந்த அனைவரையும் மனம் பதற செய்தது. புற்றுநோயின் விழிப்புணர்வின் அவசியத்தை மிக நெகிழ்வாக விளக்கினார்

.இதனை தொடர்ந்து 15,வேலம்பாளையம் திருப்பூரை சேர்ந்த பள்ளிமாணவர்களின் தப்பாட்டம் குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. வந்திருந்த அனைவரையும் மற்றுமன்றி அந்தபகுதியில் உள்ளவர்களையும் விழா அரங்கிற்கு இழுத்துவந்த நிகழ்வு. தப்பாட்டம் மற்றும் புதுக்கோட்டையின் பாரம்பரிய நடனமான சில்லாட்டம் ஆகியவை மிகச்சிறப்பாக நடைபெற்றது.


 

பதிவர் பரிசல் கிருஷ்ணாவின் நன்றியுரையுடன் நேசம் பரிசளிப்பு விழா சேர்தளம் சொந்தங்களின் சிறப்பான ஒருங்கிணைப்புடன் முடிவடைந்தது. சேர்தளம், டாக்டர் கலைச்செல்வி, திரு.கணேசன், நிகழ்காலத்தில் சிவா, மற்றும் இவ்விழாவில் செயல்பட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.


 
இந்த போட்டியின் பரிசுத்தொகை கதை போட்டியின் முதல் மூன்று பரிசுகளை தந்த யுடான்ஸ் ஜோசப், கட்டுரை போட்டியின் முதல் பரிசை ஏற்ற பதிவர் ஓ.ஆர்.பி.ராஜா, மற்றும் அனைத்து ஆறுதல் பரிசுகளையும் தன் பங்காக தந்துதவிய பதிவர் ஸ்ரீதர் நாராயணன் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல. 

நேசம் முதல் நிகழ்ச்சிக்கு அதிக வரவேற்பில்லாத போது நம்பிக்கை அளித்த ஸ்வாமிஓம்கார். பேரே சொல்லக்கூடாது என்னும் நிபந்தனையுடன் நேசம் இலச்சினை வடிவமைத்த கோபி, ஆதவன், நேற்றைய விழாவில் பேருதவி செய்த முரளியின் மைத்துனரும், செந்திலின் உறவினர் சகோதரனும், இந்த விழாவிற்காக பெங்களூரில் இருந்து வந்திருந்த கோபி, குறும்படம் இயக்கிய அனந்து, நிகழ்வுக்கு வருகை தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

போட்டியில் பங்கு பெற்றவர்களுக்கும். பரிசு பெற்றவர்களுக்கும் நேசம் சார்பில் வாழ்த்தும் நன்றிகளும். 

ஒரு சின்ன நிகழ்வாக இருந்தாலும் வெகு நிறைவான நிகழ்ச்சியாக அமைந்தது உங்கள் அனைவரின் ஆதரவே காரணம். மீண்டும் ஒருமுறை நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பர்களே. இது போன்றே வரப்போகும் நாட்களிலும் எங்களால் இயன்ற பணிகளை செய்வோம், உங்கள் ஆதரவும் அன்பும் எப்போதும் உண்டு என்ற நம்பிக்கையுடன்.


நன்றி!!!

30 மார்ச், 2012

நண்டு

வருகிற ஏப்ரல் 1ம் தேதி, மாலை 5 மணியளவில், நேசம் + யுடான்ஸ் அமைப்புகள் இணைந்து நடத்தும், புற்றுநோய் விழிப்புணர்வுக் கூட்டத்தை, சேர்தளம் ஒருங்கிணைக்கிறது.


அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம்.

20 மார்ச், 2012

கணினி பற்றிய கலந்துரையாடல்

கணினியும் கலப்பையும்- கருத்தரங்கம் - வெண்புரவி அருணா


நேற்றைய மாலைப் பொழுது இனிமையானதாகவும் உபயோகமுள்ளதாகவும் விஷயமுள்ளதாகவும் இருந்தது.

பின்னல் ட்ரஸ்ட் மற்றும் இந்திய சமூக விஞ்ஞான கழகம் நடத்திய அறிவுசார் கருத்தரங்கம் அது.  இது ஒரு புத்தகக் கண்காட்சியின் நீட்சியாகவே இருந்தது.

முதலில் பேசிய முத்துக்கண்ணன் அழகாக பேசினார்.  கணினி நம்மை எந்த அளவுக்கு அடிமைப் படுத்தி இருக்கிறது என்பதை தெளிவாக எடுத்துரைத்தார். முடிக்கும்போது ஒரு சிறுகதையைச் சொல்லி முடித்தார்.  அந்த கதை சுவராஸ்யம் மிகுந்தது.  அதை என் நினைவில் இருந்து கொடுக்கிறேன்.
ஒரு எலி மிகவும் பசித்தபடி இருக்கிறது. அதன் கண்களில் ஒரு பாத்திரத்தில் பால் தெரிகிறது.  ஆனால் அந்தப் பாலுக்காக அழுதபடி ஒரு குழந்தை இருக்கிறது.  எலி பசி கொடுத்த மயக்கத்தில் அந்த குழந்தைக்கு வைத்திருந்த பாலை குடித்துவிடுகிறது.  பசி தெளிந்த பிறகு சிந்திக்கிறது.  ஒரு குழந்தைக்கு வைத்திருந்த பாலை குடித்துவிட்டோமே என்று நாணி ஒரு பசு மாட்டிடம் போய் பால் கேட்கிறது.  நடந்ததைக் கேட்ட பசு "பால் தருகிறேன்.  ஆனால் காம்பில் இருந்து பால் வராது. காரணம் நான் புல் சாப்பிட்டு இரண்டு நாட்களாகிவிட்டது.  நீ போய் கொஞ்சம் புல் இருந்தால் கொண்டு வா" என்கிறது.

எலி அருகில் இருந்த புல்வெளிக்குச் செல்கிறது.  புற்கள் எல்லாம் வறண்டு கிடக்கிறது.  இரண்டு புல் மட்டும் கொஞ்சம் பச்சையாக இருக்கிறது.  அந்தப் புல்லிடம் நடந்ததைக் கூற, புல்லும் "நான் புல் தருகிறேன்.  ஆனால் எனக்கு கொஞ்சம் தண்ணீர் தா. பிறகு தருகிறேன் என்று கூறுகிறது.  எலி அருகில் இருந்த கிணற்றிடம் செல்கிறது.  அது தூர்ந்து போய் கிடக்கிறது. அந்த கிணற்றுக்கு செல்லும் வழியும் சிதைந்து கிடக்கிறது.  ஆனால் கொஞ்சம் தண்ணீர் இருக்கிறது.  அந்தத் தண்ணீரிடம் கதையச் சொல்ல தண்ணீர் மனமிரங்கி "தண்ணீர் தருகிறேன்.  ஆனால் இந்த வழியை சீர் செய்தால் மற்றவர்களுக்கும் பயன்படுவேன்.  ஆகையால் இந்த வழியை சரி செய்து கொடுத்துவிட்டு தண்ணீரை எடுத்துச் செல்"- என்றது.  எலியும் அருகில் இருந்த கொத்தனாரிடம் சென்று கெஞ்சி கூத்தாடி கேட்கிறது.  அவரோ வழியை சீர் செய்ய கல் வேண்டும் என்று கேட்க அருகில் இருக்கும் மலையிடம் சென்று கல் கேட்கிறது.  கதையெல்லாம் கேட்ட பிறகு அந்த மலை கல் தருகிறது.  (அப்பாடா மலைக்காவது ஈரமிருக்கே).  கல்லை எடுத்துவந்து கொத்தனாரிடம் கொடுத்து கிணற்றுக்கு அவரை கிணற்றுக்கு அழைத்து வந்து வழியை சரி செய்கிறது.  பிறகு தண்ணீரைக் கொண்டு போய் புல்லுக்கு கொடுத்து, புல்லை எடுத்துவந்து பசுவுக்கு கொடுத்து பாலைக் கொண்டுவந்து குழந்தைக்கு கொடுக்கிறது.  ஆனால் இதையெல்லாம் செய்ய அதற்கு ஐந்தாண்டுகள் ஆகிறது.  ஒரு செயலைச் செய்ய எலியே ஐந்தாண்டுத் திட்டம் போடும்போது.  கணினியுகத்தில் நாம் ஏன் ஐந்தாண்டுகளுக்குரிய திட்டங்கள் வகுத்து செயலாற்றக் கூடாது என கேட்டார்.

அடுத்து சேர்தளத்தின் சார்பாக எங்க தல வெயிலான் 'அனைவருக்குமான இணையதளம்' என்ற தலைப்பில் பேசினார்.  அவருடைய பேச்சு இன்றைய காலகட்டத்தில் இணைய தளத்தை மாணவர்களும், தொழிலதிபர்களும், ஆசிரியர்களும், இலக்கிய ஆர்வம உள்ளவர்களும் எப்படியெல்லாம் உபயோகிக்கலாம் என்றார். அவர் முத்தாய்ப்பாக பேசும்போது சொன்னது சுவராஸ்யமாகவும் நெகிழ்வாகவும் இருந்தது.


"நான் சிறுவனாக இருந்தபோது மதுரை அழகர் திருவிழாவுக்குச் செல்வோம்.  காவிரியாற்றில் முழங்கால் அளவு தண்ணீரில் எனது தாத்தா என்னை தோளில் ஏற்றி வைத்துக்கொண்டு நடந்து செல்வார்.  அப்போது நான் பார்க்கும் காட்சியை ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டு வருவேன்.  தேர் தெரிகிறது. சாமி தெரிகிறது. தூரி தெரிகிறது.  (பிகர் தெரிந்ததா தல) என்று சொல்லச் சொல்ல தாத்தாவும் உம் கொட்டி வருவார்.  இதெல்லாம் அவருக்கும் தெரியும், இருந்தபோதும் பொறுமையாக கேட்டு வருவார்.  அதுபோலத்தான் இந்தப் புத்தகக் கண்காட்சியில் எங்களுக்கு இணையப் பணி கொடுத்தார்கள்.  இது அவர்கள் எங்களை தோள் மீது ஏற்றிக்கொண்டு கண்காட்சியை காட்டியது மாதிரி இருந்தது.  நாங்களும் ஒவ்வொரு காட்சியாக இணையத்தில் பதிவு செய்தோம். அதை ஆகா ஓகோ என்று பாராட்டுகிறார்கள்.  ஒன்பது வருடமாக நடத்திக் கொண்டிருக்கும் அவர்களுக்குத் தெரியாத எந்த விஷயத்தையும் நாங்கள் செய்துவிடவில்லை.  இருந்தபோதும் பெருந்தன்மையாக எல்லோரும் தட்டிக்கொடுக்கிறார்கள்.  நாங்கள் இவர்களை தங்கள் தோளில் ஏற்றிக் காட்டிய எங்கள் மாமன்களாகவும் தாத்தன்களாகவுமே பார்க்கிறோம்"

இப்படிச் சொன்னதும் எல்லோரும் நெகிழ்வாக உணர்ந்தது அவர்களின் கை தட்டலில் தெரிந்தது.

அடுத்து சிபி ராஜ் சென்னையில் இருந்து சிறப்புரை ஆற்ற வந்திருந்தார்.    இலவச மென்பொருள் அமைப்பைச் சார்ந்தவர்.  எல்லா மென்பொருள்களும் இலவசமாகத் தரவேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார்.  எல்லா அறிவுசார்ந்த சொத்துக்களுமே பொதுவில் வைக்கப் படவேண்டும்.  மைக்ரோசாப்ட் உட்பட எல்லாவற்றையும் இலவசமாக கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்று ஆணித்தரமாக பேசினார்.  மெயில், முகநூல் மூலமாக நம்மைப் பற்றிய விபரங்கள் எப்படி திருடப்படுகிறது எனபதையும் நாம் எவ்வாறு செயலாற்றுவது என்பதையும் கூறினார்.  நாமும் அதனுள் இருந்துகொண்டே அதற்கு எதிராக போராடவேண்டியதின் அவசியத்தை எடுத்துக் கூறினார்.  எதிர்காலத்தில் தமிழிலேயே மைக்ரோசாப்ட் OS கொண்டுவரவேண்டும் என வலியுறுத்தினார்.  நேயர்களின் சரமாரியான கேள்விகளை பொறுமையாக கேட்டு குறித்துவைத்துக்கொண்டு பதிலளித்த விதம் அருமை.


தமிழில் இல்லாததின் வலியை ஜெய்வாபாய் ஈஸ்வரன் தெளிவாக சொன்னார்.  ஒரு மென்பொருளை இன்ஸ்டால் செய்யும்போது நெக்ஸ்ட் நெக்ஸ்ட் என்று கேட்டதாம் அதனை ஒவ்வொன்றாக அழுத்தி முடித்ததும் கடைசியில் திரை முழுவதும் சிகப்பாக வந்து நின்று விட்டது என்றார்.  இப்படித்தான் நிறைய பேருக்கு இருக்கிறது. 

சிந்தன் நன்றி உரையில் எதிர் காலத்தில் இதற்கென தனி அமைப்பு உருவாக்க வேண்டும் என்றார். விரைவில் அதற்கான அறிவிப்பு வரும் என்றார்.

இதை களைய எல்லோரும் ஒன்று கூடி ஒற்றுமையுடன் விவாதிக்கச் செய்யவேண்டும்.  நான் விவாதத்தை ஆரம்பித்தாயிற்று.  நீங்கள்?

25 ஜனவரி, 2012

புத்தகத் திருவிழா!

திருப்பூரில் சனவரி 25 முதல் பிப்ரவரி 5 வரை, டைமண்ட் திரையரங்கம் எதிரில் உள்ள கே.ஆர்.சி. சென்டரில் நடைபெறவிருக்கும் புத்தகக் கண்காட்சியை முன்னிலைப்படுத்துவதில் சேர்தளமும், வரவேற்புக் குழுவினருடன் கை கோர்க்கிறது.


அனைவரையும் வருக! வருக! என அன்புடன் வரவேற்கிறோம்.

19 ஜனவரி, 2012

விவாத அரங்கம்

அன்புள்ள இணைய எழுத்தாளர்கள், வாசகர்களுக்கு!

      திருப்பூர் புத்தகக் கண்காட்சி வரவேற்புக் குழுவின் சார்பில் அன்பான வணக்கங்களை தெரிவிக்கிறோம். நீங்கள் அனைவரும் அறிந்தபடி திருப்பூர் புத்தகக் கண்காட்சி 2012, வரும் சன 25 ஆம் தேதி துவங்குகிறது. நூற்றுக்கும் அதிகமான புத்தகக் கடைகள், பதிப்பகங்கள், லட்சக்கணக்கான புத்தகங்களோடு ஒரு தேனடை போல தயாரிப்பு ஏற்பாடுகள் துவங்கி நடந்து வருகின்றன.

     உங்கள் எழுத்துக்கள் மேம்பட இந்தக் கண்காட்சி இதுவரைக்கும் ஏதேனும் ஒரு வகையில் உதவியிருக்கும் என நம்புகிறோம். இந்த ஆண்டும், இனிவரும் ஒவ்வொரு ஆண்டுகளிலும் கண்காட்சிக்கு வருக! என எங்கள் அன்பான அழைப்பை இதன் மூலம் தெரிவிக்கிறோம்.
 
 

     சமூகத்தின் மேம்பாட்டுக்கு பேருதவியாகவும், கடந்த காலத்தின் அனுபவங்களை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தாங்கிச்செல்லும் ஊடகமாகவும் புத்தகங்கள் உள்ளன. இப்படி வரலாற்றின் முக்கிய பாத்திரத்தை வகிக்கும் புத்தகங்கள், கால மாற்றத்திற்கு ஏற்ப வாசிப்பும், விற்பனையும் மாற வேண்டும் என நமக்கு கற்பிக்கிறது. அந்த வகையில் புத்தகக் கண்காட்சியிலும் வருடத்திற்கு வருடம் நிறைய மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

     திருப்பூரின் வாசகர்கள், மாணவர்கள், தொழில் முனைவர்கள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கண்காட்சியை வெற்றிகரமாக்கும் பணியில் கரம் கோர்த்துள்ளனர். சமூக நோக்குடன் கண்காட்சியை நடத்தும் பொருட்டு, பலரின் உதவியுடனே, இந்தக் காட்சி தொடர்ந்து நடக்கிறது. புத்தக அரங்கின் பகுதியாக முதலில் குறும்படங்களுக்கும் சிறப்பு வளாகம் ஏற்படுத்தப்பட்டது. சென்ற ஆண்டு முதல் சூழலியல் சார்ந்த கண்காட்சிகள் நடக்கின்றன. (இந்த ஆண்டு கானுயிர் பாதுகாப்பு தொடர்பான கண்காட்சி நடக்கிறது).

    அத்துடன், புதிய ஊடகமும், வளர்ந்துவரும் ஊடகமுமான இணையதளத்தில் பேஸ்புக் பயனர்கள், வலைப்பூ எழுத்தாளர்கள், வாசகர்களையும் கண்காட்சி குழுவோடு இணைந்து செயல்பட அழைக்கிறோம். வரும் சன.25 ஆம் தேதி புத்தகக் கண்காட்சி நடக்கிறது. எனவே அதற்கு முன்பாக, வரும் 19 ஆம் தேதி மாலை 6 மணிக்கு ”புத்தகக் கண்காட்சியும்   புதிய ஊடகமும்” எனும் தலைப்பில் விவாத அரங்கம் நடக்க உள்ளது. 

வரவேற்பு:

ச.நந்தகோபால்
இணைச் செயலாளர்
புத்தகக் கண்காட்சி 2012
 
பங்கேற்பு:
 எஸ்.முத்துக்கண்ணன்
வரவேற்புகுழு செயலாளர்
திருப்பூர் புத்தகக் கண்காட்சி 2012

கணேஷ் 
ஊடகவியலாளர்

வெயிலான் ரமேஷ்
 தலைவர், சேர்தளம்

நன்றியுரை: திரு.ஜெயராமன், வரவேற்புக் குழு

அனைவரும் பங்கேற்க வேண்டுகிறோம். 

இப்படிக்கு அன்புத்தம்பி :)
இரா.சிந்தன்
வரவேற்புக் குழு இணைச் செயலாளர்.